ஜனாதிபதியின் தைத் திருநாள் வாழ்த்து

139

தைப் பொங்கல் பண்டிகை இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியில் விவசாயத்தின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. எனவே, இவ்வருட தைப் பொங்கலை நாம், கொண்டாடும் இவ்வேளையில், நாட்டின் எதிர்கால நம்பிக்கையை நனவாக்க உறுதியுடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியானது;

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும்.

வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அறுவடையின் செழுமைக்கு வித்திட்ட இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறுவதே பண்டிகையின் நோக்கமாகும்.

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

அதேபோல் தைப்பொங்கல் நமக்கு சகவாழ்வையும் மதிப்பையும் போதிக்கிறது. அதற்கமைய நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு ஒருதாய் மக்களாக முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க,
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here