முன்னாள் CID அத்தியட்சகரின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் வாடைக்கிருந்த ‘யார் இந்த அவலோகிதேஸ்வர?’

458

அவலோகிதேஸ்வர என்ற பெயரில் போதனைகளை வழங்கி வந்த மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரின் மனநலம் தொடர்பில் வைத்திய அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்றுமுன்தினம் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையின் அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த தினம் இந்நாட்டுக்கு வருகை தந்த குறித்த நபரை அவலோகிதேஸ்வர என்று அழைத்து அவரது பக்தர்களால் வழிபடுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.

அவர் சொகுசு காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்த விதம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட குழுவினர் அவரை வழிபடும் விதமும் அதில் அடங்கியிருந்தது.

அவர் மீது விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணையின் முன்னேற்றத்தை கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த நபருக்கு பயணத் தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய அனுமதிக்கவும் நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார்.

அதற்கு அனுமதி வழங்கிய கோட்டை நீதவான் திலின கமகே, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்போது சந்தேகநபருக்கு எதிராக வாதாடிய அரச சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தனது வாதத்தினை முன்வைக்கையில்;

“.. ஐயா, அவலோகிதேஸ்வர என்ற பெயரில் உலாவரும் மஹிந்த கொடித்துவக்கு எனும் நபர் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி எகிப்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தார். இவர் 1979ம் ஆண்டு ஜூன் 23ம் திகதி அம்பலாந்தோட்டை பரவாகும்புக பிரதேசத்தில் பிறந்தவர். சாதாரண தரம் வரை கல்வி பயின்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாதவர். பின்னர் 2011ம் ஆண்டு திருமணமாகி 2012ம் ஆண்டு நாய்களை பராமரிக்கும் தொழிலுக்காக எகிப்து நோக்கி சென்றுள்ளார். 2024ம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் எகிப்தில் வீசா இன்றி இருந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் இலங்கைக்கு வரும் போது 450 அமெரிக்கா டொலர்கள் தண்டமாக செலுத்தியுள்ளார்.

மஹிந்த கொடித்துவக்குவின் விசாரணைகளில் தெரியவருவதாவது, அவருடன் இன்னும் 41 சீடர்கள் உள்ளதாகவும், 2016ம் ஆண்டு அவருக்கு அவலோகிதேஸ்வர வரம் கிடைத்ததாகவும். நாடு இக்கட்டான நிலையில் உள்ளதாக அதனை நிவர்த்தி செய்ய மீண்டும் இலங்கைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த கொடித்துவக்கு எனும் நபர் இந்நாட்டுக்கு வந்து களனி விகாரைக்கு அனுமதியின்றி வணக்க வழிபாடுகளை செய்துள்ளார். அந்த நாடகத்திற்கு 15 இலட்சம் வரை பணம் செலவளிக்கப்பட்டுள்ளது. களனி விகாரைக்கு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம் வாடைகைக்கு பெறப்பட்டதாகும். பண கொடுக்கல் வாங்கல்களில் முழுதாக விலகி இருப்பதாக சந்தேக நபர் கூறினாலும் அவரது 2 வங்கிக் கணக்குகள் குறித்து அறியக் கிடைத்துள்ளது. அவரது வீட்டினை சோதனை இடும் போது 110 அமெரிக்கா டொலர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு முதல் இதுவரை யூடியூப் சேனல்கள் 5 இனை நடத்தி செல்வதாகவும் அதில் வைத்தியர்கள் இருவர், அவுஸ்திரேலியாவில் இருக்கும் பெண்ணொருவர் மற்றும் மற்றுமொரு நபர் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் வாடகை ஒப்பந்தந்தத்தின் கீழ் வசிக்கும் வீடானது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான வீடு என்றும் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபரின் மனைவி மற்றும் இரட்டை பிள்ளைகள் எகிப்தில் வசிப்பதாகவும் அவருடன் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும் சந்தேக நபரின் தந்தை மற்றும் சகோதரி தெரிவித்திருந்தார்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here