சமுர்த்தி பயனாளிகளைப் பாதுகாக்க திட்டமொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை

137

ஒழுக்கக்கேடுகள் மற்றும் பல்வேறு ஊழல் முறைகேடுகளுடன் தொடர்புடைய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கடும் அதிருப்தியை வெளியிட்டது.

மேற்படி குழு கடந்த 10ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அன்றையதினம் மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

அம்பாறை தமண்ண பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி வலைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இடம்பெற்ற நிதி முறைகேடுகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து குழு கேட்டறிந்தது. இதற்கு அமைய, பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றி ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதற்கு அமைய எதிர்காலத்தில் இவ்வாறு மோசடி செயற்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய ஒழுங்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அத்துடன், சமுர்த்தி பயனாளிகளைப் பாதுகாப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு குழு பணிப்புரை விடுத்தது.

திருப்தியடையாத சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவர்களை வலுவூட்டுவதற்கு உழைக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். தற்போது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள ஏழு நிதியங்களில் உள்ள பணத்தின் அளவு மற்றும் அந்த நிதியங்களினால் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை குழுவிற்கு அனுப்பிவைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கி முறைமையை கணினிமயமாக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழுவில் ஆராயப்பட்டது. அதன்படி, தற்போது 1089 சமுர்த்தி வங்கிகள் வலையமைப்பில் இணைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அனைத்து வங்கிகளும் இன்னும் முழுமையாக கணினிமயமாக்கப்படாததால், ஒவ்வொரு வங்கிக்கும் கணினி மயமாக்கும் திகதியை வழங்கி, அனைத்து வங்கிகளும் ஒரே முறையில் செயற்படத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here