முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிறேன் – ஞானசார தேரர்

4673

எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கூரகல விகாரை தொடர்பில் தாம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் முஸ்லிம்களுக்கு தான் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் தன்னை மன்னிக்குமாறு நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திடம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று(15) மன்னிப்பு கோரியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி செய்தியாளர் சந்திப்பின் போது தாம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்திடம் பொது மன்னிப்புக் கோருவதாக தேரர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் தெரிவித்திருந்தார்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு தனது செயல்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், வழக்கின் சாட்சிய விசாரணையை முடித்துக் கொண்டு, வழக்கின் தீர்ப்பு மார்ச் 28-ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிபதி ஆதித்ய படபெந்திகே அறிவித்தார்.

ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணிகளான ஐரேஸ் செனவிரத்ன மற்றும் சஞ்சய ஆரியதாச ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூரகல விகாரை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இலங்கையில் மத மற்றும் இன ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here