அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை முன்மொழிவுகளை விரைவாக செயல்படுத்தவும்

125

அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற அமைச்சு தொடர்பான அமைச்சரவை முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உயர்மட்டக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா சம்பந்தப்பட்ட குழுவின் தலைவர் ஆவார். அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் 4 அதிகாரிகள் இதன் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடி அமைச்சரவை முன்மொழிவுகளை அமுல்படுத்தும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து தனக்கு அறிக்கை அளிக்குமாறு அண்மையில் (22) பணிப்புரை விடுத்தார்.

அமைச்சரவைப் பத்திரங்களை தாமதமின்றி சமர்ப்பிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தலைமையில் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சரியான தகவல்கள் மற்றும் அனைத்து பின்னணி அறிக்கைகளின் அடிப்படையிலும் அமைச்சரவை பத்திரங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், சில தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் உண்மைகளை சரியாக ஆராயாமல் தவறான தகவல்களை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தவறாக வழிநடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விடயத்தக்குப் பொறுப்பான அமைச்சரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சைப் பெறுப்பேற்ற நாளிலிருந்து 2023 ஆம் ஆண்டு இறுதி வரை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக 190 அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். அந்த அமைச்சரவை பத்திரங்கள் அனைத்தும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, தவறான மற்றும் அடிப்படையற்ற தகவல்களை அமைச்சரவையில் முன்வைப்பதன் விளைவுகள் கடந்த காலங்களில் காணப்பட்டதாக தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் இவ்வாறானதொன்று இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய செயலாளர், அமைச்சரவை பத்திரங்களை முறையாக தயாரிப்பதற்கான தகவல்களை வழங்குவது அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். அமைச்சரவை பத்திரங்களை தாமதமின்றி தயாரிப்பதற்கு கூட்டுச் செயற்பாடு அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள் உட்பட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here