கடல் போக்குவரத்தில் சுதந்திரம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

122

அதிகார மோதல்கள் இன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாடுகளை பேணுவதில் இலங்கை அர்பணிப்புடன் இருக்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடல்சார் செயற்பாடுகளின் சுதந்திரத்திற்காக இலங்கை அர்பணிப்புடன் இருப்பதாலேயே செங்கடல் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை முன்வந்திருப்பதாகவும், ஆறு நாள் யுத்தத்தின் விளைவாக சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அறிவுறுத்தினார்.

அதனால் வரையறைகள் அற்ற கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாத் பைண்டர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டின் மூன்றாவது கட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (28) நடைபெற்றது.

உலகளாவிய பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலிக்குள் பிராந்தியத்தின் ஈடுகொடுக்கும் இயலுமைய வலியுறுத்தும் வயைில், இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ஆராயும் இந்த இரு நாள் மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஒரே தடம் – ஒரே பாதை வேலைத்திட்டம் அல்லது இந்து – பசுபிக் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தை பார்க்க முடியாது. இந்து சமுத்திரம் தற்காலத்தில் உலக மூலோபாய அரசியல் வலயமாக மாறியுள்ளது. கடந்த 5 – 6 வருடங்களிலேயே அது நிகழ்ந்துள்ளது. இதுவரையான நிகழ்வுகளில் அதனை நாம் உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.

அதேபோல் இந்திய உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக உருவெடுக்கப்போகிறது. 21 ஆவது நூற்றாண்டின் இறுதி வரையிலும் இந்தியாவின் வர்த்தக சந்தை விரிவடையும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர். இந்துனேசியாவும் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது.

அதன்படி இந்து சமுத்திய வலயம் தற்போது எழுச்சி காணும் பொருளாதார வலயமாக மாறியுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் அதிகார மோதல்கள் அற்ற இந்து சமுத்திரத்தின் கப்பல் செயற்பாடுகளின் சுதந்திரத்தை மூலோபாய நிலைப்பாட்டிற்காக இலங்கை அர்பணிப்புடன் செயற்படும்.

அதன்படியே செங்கடலின் முன்னெடுப்புகளுக்கும் இலங்கை ஒத்துழைக்க தீர்மானித்தது. தற்போதைய நிலைமைகளுக்கமைய முன்னெடுப்புகளுக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால் சுயஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. ஆறு நாள் யுத்தத்தின் விளைவாக சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் 10 வருடங்களாக கொழும்பு துறைமுகம் நெருக்கடியை சந்தித்தது. அதனால் கடல் போக்குவரத்தில் சுதந்திரம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here