சம்பளத்தை அதிகரிப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை

177

சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இன்று (05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், மத்திய வங்கியின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தில் சுயாதீன தீர்மானமாக சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்த போதிலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய குறித்த விடயத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்ற காரணத்தினால் இவ்விடயம் சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்படி, புதிய சட்டத்தில் மத்திய வங்கியின் பணிகளை சுயாதீனமாக மேற்கொள்ள ஏற்பாடுகள் உள்ள போதிலும், சுயாதீன தீர்மானத்தின் அடிப்படையில் சம்பளத்தை அதிகரிக்க எந்தவொரு இடத்திலும் அதிகாரம் இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிடுகையில், சட்டத்தின் 5,8 மற்றும் 23வது பிரிவுகளில் அதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும், நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை தொடர்பில் சகல செலவீனங்களையும் ஈடுசெய்வதற்கு மத்திய வங்கியின் நிதியத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனினும், செலவீனங்கள் தொடர்பில் சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தபோதிலும், சம்பளம் தொடர்பில் குறிப்பிட்ட ஏற்பாடுகள் இல்லையென கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். சட்டத்தின் 23வது பிரிவுக்கு அமைய சம்பள அதிகரிப்பை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தாலும் அதற்கான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஏதாவது ஒரு விதத்தில் சட்டத்தின் ஊடாக அனுமதி இருந்தாலும், நாடும் நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணர்வற்ற வகையில் இவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தார்மீகப் பொறுப்பற்றது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கட்சித் தலைவர்கள், மத்திய வங்கியின் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஒரு பிரிவினருக்கு மாத்திரம் இந்தளவு வரப்பிரசாதங்களை வழங்குவது ஒருபோதும் அனுமதிக்க முடியாதது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பின் காரணமாக மாதமொன்றுக்கு மேலதிகமாக ஏறத்தாள 232 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here