கொழும்பு கஜிமா தோட்ட வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு

461

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் வீடமைப்புகளை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு கஜிமா தோட்ட வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகளை ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்படும் அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு இன்னும் அதிகமான வீட்டுத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். அதற்கு தகுந்த அமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. சத்தியானந்தா, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here