நாட்டின் பிரதான சுற்றுலா நகரமாக காலியை மாற்றவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி கோட்டையை சூழவுள்ள பல அரச அலுவலகங்கள் அந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காலி ஹோலுவாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சுற்றுலா வர்த்தகத்தை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதனை அபிவிருத்தி செய்வதற்கு தெற்கில் பெரிய இடம் உள்ளது. தெற்கில் பிரதானமானது காலி நகரம். காலி கோட்டையில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களும் அகற்றப்பட்டு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்படும். இதனால் இன்னும் எத்தனை பேர் வாழ முடியும்?
மக மோதர வைத்தியசாலை அமைந்துள்ள இடத்தில் சுமார் 10 ஏக்கர் காணப்படுகின்றது. நல்ல சுற்றுலாப் பகுதியை உருவாக்குங்கள். காலி சிறைச்சாலையை காலி செய்ய பணம் கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன அப்புறப்படுத்தி மீள் நிர்மாணிக்க..
காலி நமது முக்கிய சுற்றுலா நகரமாக மாற வாய்ப்புள்ளது. 100, 50 டாலர்கள் கிடைத்தால் போதாது. நாம் 200, 300 டாலர்களைப் பெற முயற்சிக்க வேண்டும்..”
இந்நிலையில், காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக மேம்படுத்துவதற்கான அபிப்பிராயங்கள் கோரப்பட்டுள்ளன.
துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளோம் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகள் வருகை தரும் வகையில் துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.