2024 இறுதிக்குள் கலாபவனத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

113

பதின்மூன்று வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு மற்றும் மூடப்பட்டுள்ள தேசிய கலாபவன வளாகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வருட இறுதிக்குள் தேசிய கலாபவனத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

2011 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கலைக்கூடத்தின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தேசிய கலாபவனத்தை புனர்நிர்மாணப் பணியும் முடங்கியுள்ளது.

கலாபவனம் தொடர்பாக கலைஞர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை செவிமடுத்த ஜனாதிபதி, அது தொடர்பில் பொதுவான உடன்பாட்டை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சகல தரப்பினருடனும் இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் இந்த வருட இறுதிக்குள் கலாபவனத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தார். தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு நகருக்கு இன்று தேவைப்படுவது குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உயர்தர திரையரங்குகளே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜோன் டி சில்வா திரையரங்கு நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அவ்வாறு குறைந்த விலைக்கு திரையரங்குகளை வழங்க முடியுமா என வினவினார்.

இந்த நிர்மாணம் மற்றும் பராமரிப்பு தொடர்பில் நாடக கலைஞர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வருவதே சிறந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நாடகத்துறைக்காக லும்பினி அரங்கு மற்றும் புதிய அரங்கு புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தெரிவித்த ஜனாதிபதி, கொழும்பு சுதர்ஷி வளாகத்தில் நாடக அரங்கொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

தாமரைத்தடாகம், கலாபவனம், ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு, நூதனசாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய வளாகங்களை இணைத்து தேசிய கலாசார வலயமொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு கலாசார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here