டெல் அவிவ் செல்லும் விமானங்களை நிறுத்தியது AIR INDIA

207

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியாவும் கூறியுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமானம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகரத்திற்கு வாரத்திற்கு 4 நாட்கள் ஏர் இந்தியா நேரடி விமானத்தை இயக்கி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் இந்தியா, டெல் அவிவ் நகருக்கு இயக்கி வந்த விமானத்தை நிறுத்தியது.

இதையடுத்து, 5 மாதங்களுக்குப் பிறகு அதாவது, கடந்த மாதம் 3 ஆம் திகதி மீண்டும் சேவையை தொடங்கியது. தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதனிடையே, சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் கடந்த வாரம் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர் உட்பட சிலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று கூறிய ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியது. இந்த நிலையில், இன்று அதிகாலை, அடுக்கடுக்கான ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here