நட்பு நாடுகளை உதறிய இஸ்ரேல்

1661

இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் திகதி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடி பதில் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கவில்லை.

இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும், நேற்று அதிகாலையும் சுமார் 150 ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் 2 கமாண்டர்கள் உட்பட மூன்று ஹில்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள அறிக்கை பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, “ஈரான் விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும். நட்பு நாடுகளின் கருத்துக்கள் முரணாக இருந்தாலும், இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார். அதாவது, ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கூடாது, என்று இஸ்ரேலை வலியுறுத்தியிருந்தன.

ஆனால், நெதன்யாகு இந்த அறிவுறுத்தலை ஏற்க தயாராக இல்லை என்பது, தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here