திருப்பியடித்த இஸ்ரேல்

420

இஸ்ரேல் இராணுவ தளங்களை குறிவைத்து நேற்று லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இன்று இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

பலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது இராணுவ தாக்குதலை முன்னெடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு சபதம் விடுத்துள்ளார்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வருகின்றனர்.

ஆனால் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, நேற்று இரவு இஸ்ரேல் இராணுவ தளங்களை குறிவைத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. கத்யுஷா வகை ராக்கெட்டுகளை ஏவி அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. லெபனானில் உள்ள ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் நிதி உதவி அளித்து வருகிறது.

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகத்தான் 12 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலால் கோபம் அடைந்த இஸ்ரேல் இராணுவம், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் வான் பாதுகாப்பு படையில் பணியாற்றிய என்ஜினியர் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். எல்லையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபு அல் அஸ்வாத் என்ற கடலோர பகுதியில் தான் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

தங்கள் வீரர்கள் இருவர் உயிரிழந்து இருப்பதாக ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து லெபனானில் இதுவரை 378 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். பொதுமக்களில் 70 பேரும் பலியானதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here