உண்மையை வெளிப்படுத்த முடியாவிட்டால் வீட்டுக்குப் போவோம்

146

முன்னைய விவாதங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை பொருட்படுத்தாது, அவ்வாறான ஓர் தாக்குதல் நடக்காதது போல் கருதி, பொறுப்புள்ள அரசாங்க தரப்புகள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினரை அவமானப்படுத்தப்படும் வகையில் நடந்து கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன். இதன் கீழ், 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணையச் சட்டத்தின் பிரிவு 2 (1) ஏ இன் கீழ் உள்நாட்டு,வெளிநாட்டு விசாரணையாளர்கள் 7 முதல் 9 பேரைக் கொண்ட ஓர் விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டு நிபந்தனையின்றி, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். இதுமட்டுமின்றி இதற்காக சுயாதீன அலுவலகம் நிறுவப்பட்டு ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, சட்டமா அதிபர் ஊடாக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து, இதற்காக விசேட நீதிமன்றத்தை நிறுவுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வழக்கு தொடுநர் அலுவலகமும் அமைக்கப்படும். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குழுக்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள், பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தி, கூடிய தண்டனை பெற்றுக் கொடுக்கவும் தயங்க மாட்டோம். மேற்கொள்ளப் போகும் அனைத்து விடயங்களையும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்றைய தினம் இவற்றை ஹன்சார்ட் பதிவிடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதில் உண்மையைக் கண்டறிய முயலும் போது, ​​பல்வேறு சதிகள் மேற்கொள்ளப்படும், அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார். எக்காரணம் கொண்டும், எந்த சக்திக்கும் உண்மை வெளிப்படுவதை தடுக்க இடமளியோம். உண்மையை வெளிக்கொணர முடியாவிட்டால், பதவியை விட்டு விலகுவதே தனக்கு மரியாதை. பதவியை தலையில் வைத்துக் கொண்டு பெருமை கொள்பவன் நான் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here