கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றக்கூடாது

94

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் நேற்று(23) நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அதனை கல்வி நிபுணர்களுக்கு மாத்திரமானதாக மட்டுப்படுத்தாமல், பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதார துறையினர், அகில இலங்கை வளவாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதே கல்வி அமைச்சின் பொறுப்பாகும். அதற்கு மேலதிகமான பிரத்தியேக வகுப்பு முறைமைகள் நாட்டுக்குள் உருவாகி வெகுவாக வளர்ந்துள்ளன. இன்று பாடசாலைக் கல்வியும் பிரத்தியேக வகுப்பு முறையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு முன்னேற்றம் கண்டுள்ளன.

பாடசாலைக் கல்விக்கும், பிரத்தியேக வகுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன, அதேபோன்று ஒன்லைன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை கல்வியில் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இன்று தொழில்நுட்பத்தால் கல்வியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த மாற்றத்துடன் நாம் முன்னேற வேண்டும்

ஏனைய நாடுகளுக்கு முன் இலவசக் கல்வியை நாம் தொடங்கினோம். எனவே இந்த புதிய தொழில்நுட்பத்தை கல்வியில் எவ்வாறு சேர்ப்பது என்பதை அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் நாம் சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப, நவீன கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்கு அல்ல, 2050 ஆம் ஆண்டுக்கான கல்வி முறையாக அது இருக்க வேண்டும்.

இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை கல்வி நிபுணர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அவர்களைப் போன்று, பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மற்றும் அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களையும் இதில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

அந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, நவீன கல்வி முறைக்கு செல்ல வேண்டும். அங்கு முன்வைக்கப்படும் எந்த ஆலோசனையும் நிராகரிக்கப்படக்கூடாது. மேலும் கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றக்கூடாது. நாம் எவ்வளவு விளையாடினாலும் கோல் அடிக்க முடியாது.

இறுதியில் நாடுதான் தோல்வி அடையும். எனவே, இதிலிருந்து விடுபட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்காலக் கல்வி முறையை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதன்படி, 2050 ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டிற்கு சிறந்த கல்வி முறை எது என்பதை இந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கலந்துரையாடப்பட வேண்டும். அதன் பிறகும் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களோடு நாம் தொடர்ந்து பரிமாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here