follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP240 இந்தியர்கள் உட்பட 49 உயிர்களை பறித்த குவைத் தீ விபத்துக்கான காரணம் என்ன?

40 இந்தியர்கள் உட்பட 49 உயிர்களை பறித்த குவைத் தீ விபத்துக்கான காரணம் என்ன?

Published on

குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடித்தக்கது.

ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர்களில் 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு ஷிப்ட் என்பதால் பணிக்கு சென்றுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தை அடுத்து குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா தெரிவிக்கையில்; “..உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்த குணம் பெற வேண்டுகிறேன். இந்த விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் துரிதமாக விசாரிக்க வேண்டும். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதை அந்த நாட்டின் தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. கேரளா, தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக குவைத் தடயவியல் துறை தகவல். குவைத் முடி இளவரசர் ஷேக் சபா, குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கு என்பிடிசி நிறுவனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரின் பேராசை தான் காரணம் என பாதுகாப்பு துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஷேக் ஃபகத் அல் யூசுப் அல் சபா தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குவைத் நகரில் நிகழ்ந்த தீ விபத்து மிகுந்த துயரை தருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குவைத் தீ விபத்து பற்றிய செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் தூதர் அங்கு விரைந்துள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் தூதரகம் முழு அளவில் உதவிகளை செய்யும்” என்று கூறியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...