சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 48ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய தீர்வை வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இவ்வாறான கருத்தை வெளியிட்டார்.
“பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு காண உடன்பாடு ஏற்பட்டது. கல்வி சாரா ஊழியர்களின் கல்வி கொடுப்பனவை அதிகரித்த பின்னரே இரண்டாவது கோரிக்கை வந்தது.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. அப்படியானால், UGCயில் மீதியுள்ள பணத்தில் இருந்து செலுத்த வேண்டும். செலுத்த முயற்சித்தோம்.
நாங்கள் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தோம். அவர்களுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் திறைசேரியின் உடன்பாடு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
UGCயுடன் கலந்துரையாடலும் உள்ளது. அந்தந்த தொழிற்சங்கங்கள் அங்கு ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறேன்.
அப்படி நடந்தால், இது தான் ரோடு மேப் என்று எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்கு வந்ததும் சம்பளம் தருவதாக கூறியுள்ளோம்” என்றார்.