பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்வது தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், டெய்லி சிலோன் அந்தந்த காலகட்டத்திற்கான இது குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கியிருந்தோம்.
அது அவ்வாறு இருக்க கடந்த 2023 ஒக்டோபர் 15ம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டிருந்த நிலையில் ‘பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களின் போது, பணம் அறவிடத் தடை’ என்ற தலைப்பில் நாம் செய்தியினை வெளியிட்டிருந்தோம். முகநூல் செய்தி அட்டையில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களில் பணம் வசூலித்தால் 026-7 500 500 என்ற இலக்கத்திற்கு முறையிடலாம் எனவும் தெரிவித்திருந்தோம்.
குறித்த செய்தியானது பிரசுரமாகி சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் குறித்த பதிவானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலத்தில் இருந்து எம்மை தொடர்பு கொண்டு இதுகுறித்து வினவியிருந்தனர். அவர்கள் தரப்பில் நமக்கு முன்வைத்த அனைத்து விடயங்களையும் நாம் 9 மாதங்களுக்கு முன்னரே தெளிவாக நமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதாவது, கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து கற்பிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவே நாமும் தெரிவித்துள்ளோம். முகநூல் செய்தி அட்டையை மேற்கோள்காட்டியே அவர்கள் எம்மிடம் இதுகுறித்து வினவி இருந்தனர்.
பாடசாலை ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களின் போது, பணம் அறவிடத் தடை
24 மணிநேரமும் இயங்கும் ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தின் 026 7500 500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலையில் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியே கற்பிக்கும் பட்சத்தில் மாத்திரம் முறையிடுமாறும் மக்களை கோருகிறார்கள்.
நாளுக்கு அதிகளவான முறைப்பாடுகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறுவதாகவும் அதில் விடயத்திற்கு புறம்பான அழைப்புக்கள் அதிகமாக வருவதால் அது அவர்களது ஏனைய பணிகளுக்கு சிரமமாக இருப்பதாகவும் டெய்லி சிலோனுக்கு தெரிவித்திருந்தனர்.
டெய்லி சிலோன் எப்போதும் மக்கள் குரலாக இருக்கும் என்பதனை வாசகர் நெஞ்சங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.