தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாக சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து, பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்திய குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் இருந்து 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (12) வழக்கு தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விமல் வீரவன்ச 2015ஆம் ஆண்டு வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தாக்கல் செய்தனர்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் 8 வருடங்களாக இடம்பெற்று வந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் விமல் வீரவன்சவை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்த வழக்கில், விமல் வீரவன்சவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சரத் ஜயமான்னவினால், நாடாளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த கேள்விக்குரிய கடவுச்சீட்டு போலியானதல்ல என்பதை நிரூபித்திருந்தார்.
உண்மைகளை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை விடுதலை செய்தார்.
அதன் பிரகாரம், மேற்படி வழக்கை துஷ்பிரயோகம் செய்து பராமரிப்பதன் மூலம் தாம் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான வேதனைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும், தனது நற்பெயருக்கும் சமூக மரியாதைக்கும் குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் முறைப்பாட்டைச் செய்த அதிகாரிகளிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு விமல் வீரவன்ச கோரினார். இந்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன், நியாயமான விசாரணை நடத்தாமல், கிரிமினல் குற்றம் இல்லை என்று தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்பட்டு, தீங்கிழைக்கும் வகையில் வழக்குத் தொடர்ந்ததாக இன்று தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தினேஷ் டி சில்வா, சட்டத்தரணி சினெத் பண்டார மற்றும் சட்டத்தரணி திலினி பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்போது ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கிணங்க அல்லது அவர்களின் ஆலோசனைக்கு அமைய அதிகாரிகள் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.