மக்கள் வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் மேம்பாடு தொடர்பில் முறையற்ற பரிவர்த்தனையொன்று இடம்பெற்றுள்ளதாக மறைமுகமாக குற்றஞ்சுமத்தும் வகையில் சமீபத்தில் எழுந்துள்ள செய்தி குறித்து மக்கள் வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன், எந்தவொரு நடவடிக்கையிலும், எவ்வகையிலும் ஈடுபடவில்லை என்பதை வங்கி திட்டவட்டமாக மறுக்கின்றது.
பின்வரும் விடயங்களை மக்கள் வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
• தற்போது பாவனையிலுள்ள பிரதான வங்கிச்சேவை தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு 2004 ஆம் ஆண்டில் முதலில் செயல்படுத்தப்பட்டிருந்ததுடன், டிஜிட்டல் வங்கிச்சேவைத் துறையில் மக்கள் வங்கியின் தலைமைத்துவ ஸ்தானத்தை ஆணித்தரமாக நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
• வளர்ச்சி மீதான எமது அர்ப்பணிப்புக்கு அமைவாகவும், அதிநவீன தொழில்நுட்பத்தின் அநுகூலத்தை கையிலெடுக்க வேண்டிய தேவை கருத்தியும், காலதத்திற்கு காலம் தனது தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்கள் அனைத்தையும் வங்கி மேம்படுத்தி வருகின்றது.
• அந்த வகையில், தொழில்நுட்பம், செயல்பாட்டு திறன் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் முகமாக, தனது பிரதான வங்கிச்சேவை தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முன்மொழிவை மதிப்பீடு செய்யும் செயல்பாட்டில் வங்கி ஈடுபட்டுள்ளது.
• விவேகமான மற்றும் வழக்கமான கொள்வனவு நடைமுறைகளுக்கு அமைவாக, இந்த முன்மொழிவு குறித்த தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் மற்றும் மதிப்பீடுகள் இன்னமும் இடம்பெற்று
வருகின்றன.
• மேற்குறிப்பிட்ட முன்மொழிவு குறித்து இது வரையில் எந்தவொரு தரப்பினருடனும் உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவுமில்லை, நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து எவ்விதமான உறுதிமொழியும்
வழங்கப்படவுமில்லை.
தனது செயல்பாடுகள் அனைத்திலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக ஆட்சியில் அதியுயர் தராதரங்களைப் பேணுவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் நம்புமாறு நாம் மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், தவறான தகவல்களால், தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.