எதிர்வரும் 21ஆம் திகதி கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து ஊழியர்கள் தமது வாக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் விடுமுறை எடுக்க உள்ளதாகவும், இதன் காரணமாக அன்றைய தினம் பேருந்துப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் குமாரதாச குளியாப்பிட்டிய தெரிவித்தார்.
பேருந்து ஊழியர்களில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், இதனால் தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்வதால் வரும் 21ஆம் திகதி பேருந்து சேவை 15-20 சதவீதமாக மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டு முதல் பஸ் சேவைகள் அத்தியாவசிய சேவையாக இருப்பதால் பஸ் ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அத்தகைய திட்டம் செயல்படுத்தப்படாததால், போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வாக்குப்பதிவு நாளில், தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.