ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 35 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களின் நலனை விசாரிப்பதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று (11) இரவு மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தார்.
பிரதமர் கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளுக்கு சென்று, அங்கு சிகிச்சை பெறும் காயமடைந்தவர்களின் நலனை விசாரித்தார். இதன்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் மருந்து தேவைகள் மற்றும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் அவர் ஆராய்ந்தார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.