இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, நீண்ட தூர ரயில் சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்த நடவடிக்கையின் காரணமாக, நேற்று இரவு இயக்கப்படவிருந்த அனைத்து தபால் ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
இதனிடையே, நேற்று இரவு நேர தபால் ரயில் பயணத்தின் மத்தியில் நிறுத்தப்பட்டு மீண்டும் காலிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.