16ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னத்தின் முன்பாக, பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை இந்நிகழ்வு இடம்பெறும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, 16ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வை முன்னிட்டு, பத்தரமுல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிற்பகல் 4 மணி முதல் 6:30 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும்.
இந்தக் காலப்பகுதியில் வீதிகள் மூடப்படாது எனவும், நினைவு தின நிகழ்வுகள் நடைபெறும் போது வாகன நெரிசல் ஏற்பட்டால், பொல்துவ சந்தியிலிருந்து ஜெயந்திபுர மற்றும் நாடாளுமன்ற வீதி வரையிலான பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் காலத்தில், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.