காசா நகரின் கடற்கரை பகுதியில் நிகழ்ந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் அமைந்துள்ள அல்-அக்ஸா மருத்துவமனை மீது பரபரப்பான அளவிலான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நகரத்தில் உள்ள அல்-வஹ்தா வீதியில் பாதசாரிகளை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸ் பகுதியில் வீடுகள் தொடர்ச்சியாக இடிந்து விழுந்து வருவதாகவும், மக்கள் பாதுகாப்பின்றி அச்சத்தில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நிலத்தடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், அந்தப் பகுதியில் உள்ள 18 பகுதிகளை வெறிச்சோட விடுமாறு மக்கள் மீது இறுதி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பாடசாலைகள் நேற்றைய தினம் தாக்கப்பட்டன. கான் யூனிஸில் அமைந்துள்ள உணவு விநியோக மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தும், 50 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
நேற்று மட்டும் காசாவில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் 60 பேர் காசா நகரம் மற்றும் வடக்கு பகுதிகளில் மட்டும் உயிரிழந்துள்ளனர். தற்போது, காசாவின் 80% பகுதிகள் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் ஊழல் வழக்கின் விசாரணை இந்த வாரம் தொடங்கவிருந்தது. ஆனால், அவரது வேண்டுகோளின் பேரில் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் அதை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. கடந்த வாரம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வழக்கை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.