பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், அர்ச்சுனா பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதோ வாக்களிப்பதோ தடுக்கப்படும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இந்த மனு விசாரணை நடைபெறும் வரையும் அவருக்கு உரிமைகள் இருக்கின்றன என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை, நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்தது.
மனுவை, சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி அசோக் பரன், அர்ச்சுனா அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியலமைப்பின் அடிப்படையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க முடியாது என வாதிட்டார்.
மாறாக, அர்ச்சுனாவின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, அவர் சம்பளம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அரசாங்க ஊழியராக வகிக்கவில்லை என்பதையும், எனவே சட்டப்படி எந்த தடையும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
இரு தரப்புகளின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தீர்மானித்து, வழக்கை ஓகஸ்ட் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அறிவித்துள்ளது.