அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை, சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
இந்த கட்டமைப்பின் மூலம், நாட்டிற்கு அருகிலுள்ள அணுசக்தி நிலையங்களில் இயற்கை அல்லது செயற்கை காரணங்களால் ஏற்படும் விபத்துகளின் போது கதிர்வீச்சு நிலைமைகள் குறித்து உடனடியாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என வலுசக்தி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு மையங்கள் நிறுவப்படவுள்ளன.
இது தொடர்பாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப்பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன, இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.