உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி. துசித மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது சிகிரியா யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் இல்லையெனினும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா, கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மன்னர் காசியப்பனால் கட்டப்பட்டதாகும்
அதன் கட்டிடக்கலை, சுவரோவியங்கள், கண்ணாடிச்சுவர் மற்றும் வரலாற்று எழுத்துகள் உலகப் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1982ஆம் ஆண்டு, சிகிரியா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. எனினும், சமீபகாலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் அதிகரிப்பது, சிகிரியாவின் அந்த மரியாதையை எதிர்காலத்தில் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என பல தேசிய ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செய்தி வெளியிட்டுள்ளன.