பொதுவாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது ஒரு நபர் மட்டும் சில வினாடிகளிலேயே சாப்பிட்டு முடித்து விடுவார்.
இப்படி சீக்கிரம் சீக்கிரமா உணவை விழுங்குபவர்களுக்கு ஏற்படும் பின் விளைவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அதிகம் சாப்பிடுதல்
ஒருவர் சாப்பிட்ட உணவை பதிவு செய்வதற்கு மூளையானது பொதுவாக 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கும்போது குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடித்து விட்டால் வயிறு நிறைந்துவிட்டது என்ற சிக்னலை மூளை கொடுக்காது. அதனால் இன்னும் அதிகமாக சாப்பிட நேரலாம்.
செரிமான கோளாறு
விரைவாக சாப்பிடுபவர்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் வயிற்றுக்குள் செல்லும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு வயிறு உப்புசம், வாயு அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஆசிட் ரிஃப்லெக்ஸ்
அவசரமாக சாப்பிடுபவர்கள் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடாத போது உணவு சரியாக உடைபடாமல் வயிற்றில் ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்னும் அமில அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது மற்ற வயிற்று பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.
மூச்சு முட்டுதல்
வேகமாக உணவுகளை சாப்பிடும் போது பல சமயங்களில் தொண்டையில் உணவு சிக்கிக் கொள்ளலாம். இதனால் பலருக்கு மூச்சு விட முடியாமல் போகும். இதனை தவிர்க்க சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
எடை அதிகரிப்பு
வேகமாக உண்பவர்கள் அதிகமாக உண்பதால் நாளடைவில் இது அவர்களுக்கு உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. விரைவாக உண்ணும் பழக்கத்தை தவிர்த்து விடுவதே சிறந்தது.
வளர்ச்சிதை மாற்றங்கள்
வேகமாக உண்ணும் பழக்கத்தை குறைக்காவிட்டால் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு ஆகிய அதிக அபாயத்துடன் கூடிய தொடர்புடைய நோய்களில் இளம் வயதிலேயே கொண்டு போய் சேர்க்கும் என்பதால் இந்த பழக்கத்தை மாற்றி விடுங்கள்.
சாப்பிடும் முறை
20 முதல் 30 முறை வரை ஒரு வாய் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் சாப்பிடும் போது ஸ்பூனை கீழே வைத்து விட்டு நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
கவனச் சிதறலை ஏற்படுத்துவதோடு முழு மனதாக நம்மை சாப்பிட விடாமல் செய்யும் டிவி மொபைல் போன் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது தவிர்க்க வேண்டும்.
நொறுங்க தின்றால் நூறு வயது என்பது நம் முன்னோர் பழமொழி இந்த பழமொழிக்கேற்ப நாம் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட்டு விழுங்குவதால் உடல் இயக்கம் சீராக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு முறையாக பின்பற்றுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)