கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதியால் அவரது பெயர் அதிகாரபூர்வமாக செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அங்கீகார நடவடிக்கையின் ஒரு முக்கியமான கட்டமாகும்.
எரிக் மேயர், அமெரிக்க வெளிநாட்டுத் துறை சேவையின் (Senior Foreign Service) மூத்த உறுப்பினராக பல்லாண்டுகள் அனுபவமுடையவர். தற்போது அவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் (Bureau of South and Central Asian Affairs) மூத்த அதிகாரியாக இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் அமெரிக்க கொள்கைகளின் முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்து வருகிறார்.
மேலும், நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது.
இந்நியமனம் அமெரிக்க-இலங்கை இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு புதிய கட்டமாக அமைவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.