சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில், மணிக்கு 50-60 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால், குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடற்கரைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகளில் 2.5 – 3.0 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளது.
இது கரையை அடையும் அலைகளின் நேரடி உயரம் அல்ல என்றும், எவ்வாறாயினும் இந்தப் பகுதிகளில் அலைகள் கரைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, கடலில் பயணம் செய்யும் மீனவர்கள், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எல்லோரும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.