தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்பொழுது செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள், அவை மதிப்பிடப்பட்ட விதம் மற்றும் இவற்றை அனுமதிப்பதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையொன்று ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பான விபரங்கள் அடுத்த கோப் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2018, 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் மக்கள் வங்கி நேற்று (04) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே அதன் தலைவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ள நிலையில், பணம் செலுத்தும் நிலையில் இல்லாமல் அல்லது போதுமான சொத்துக்களை பிணையாக வைக்காமல் சில நிறுவனங்களால் 2,3,4 பில்லியன் ரூபா போன்று பாரிய தொகை கடன்களாகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்திருப்பதாகவும், இதற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் உறுப்பினர்கள் இங்கு கவனம் செலுத்தினர்.
எதிர்காலத்தில் கடன்களை வழங்கும்போது தற்பொழுது காணப்படும் உரிய நடைமறையின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேசிய சொத்துக்கள் குறித்து மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், 2015 இல் ஆரம்பிக்கப்பட்ட டேட்டா வேர் ஹவுஸ் திட்டத்துகு்கு ஏறக்குறைய 402 மில்லியன் ரூபா செலவிடப்பட்டபோதிலும், அது எதிர்பார்த்த அளவு பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்தது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மக்கள் வங்கியின் அப்போதைய தலைவரால் நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைவர் இத்திட்டத்தை முன்னெடுத்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது பற்றியும் இங்கு பேசப்பட்டது. இதற்கான சாத்தியக்கூற்று ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பயன்படுத்த முடியாமல் உள்ள திட்டத்துக்காக ஏறக்குறைய 402 மில்லியன் ரூபா செலவிடப்பட்டமை பாரதூரமான விடயம் என்பதனால் அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். மேலும் இவ்விடயம் குறித்து விசேட கணக்காய்வொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் நாயகத்திடம் தெரிவித்தார்.
பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்துக்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்பட்டு, அவற்றை செயற்படாத கடன்களாக மாற்றியமையும் இங்கு புலப்பட்டது. 31.12.2019 நிலவரப்படி, மொத்த கடன் தொகை 4.2 பில்லியன் ரூபாவாகும். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.