follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமன்னிப்பு கோரினார் பொலிஸ்மா அதிபர்

மன்னிப்பு கோரினார் பொலிஸ்மா அதிபர்

Published on

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நிலுவை சம்பளத்துடன் உப பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸ் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் எனவும் உயர்நீதிமன்றத்தில், இன்று (16) உறுதியளித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான மஹிந்த குணரத்ன, ஜே.எஸ்.வீரசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எம்.என்.எஸ்.மென்டிஸ், சனத் குமார ஆகியோரை இன்று (16) மன்றில் ஆஜராகுமாறு, செப்டெம்பர் 23ஆம் திகதி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

சுதத் மெண்டிஸின் அடிப்படை உரிமைகள் மீறல் மனு, நீதியரசர்களான எஸ்.துரைராஜா, பிரியந்த ஜயவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் இன்று (16) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட நால்வரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதற்காக, பிரதிவாதிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக அவர்கள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே, மன்றுக்கு அறிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத் தாமதத்தால் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரான உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சீ.ஐ.டியின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸின் சம்பளத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2022ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமுல்படுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டதையடுத்தே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 4 பேரை குற்றம் சாட்டுவதற்காக ஷானி அபேசேகர, ஆயுதங்களை தொடர்புபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த வழக்கில் தனது உயர் அதிகாரி ஷானியுடன் குறித்த குற்றத்தை புரிந்ததாக, மெண்டிஸ் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், முறைப்பாடுகளில் உள்ள முரண்பாடான நிலைப்பாடுகளைக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் ஷானி அபேசேகரவுடன் சுதத் மெண்டிஸுக்கும் பிணை வழங்கியது.

தான் பணிநீக்கம் செய்யப்பட்டு சம்பளம் உள்ளிட்ட தனது உரிமைகள் மறுக்கப்பட்டமை மற்றும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகள் தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மெண்டிஸ், தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LATEST NEWS

MORE ARTICLES

சபாநாயகரை சந்தித்த உகண்டா தேசிய கிரிக்கெட் அணி

உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இலங்கை கிரிக்கட்டின்...

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...