சமனல வாவியில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிப்பது தொடர்பான யோசனை, இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அடங்கிய யோசனை மீண்டும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
விவசாயத்திற்கு தேவையான நீரை விநியோகிக்குமாறு கோரி எம்பிலிப்பிட்டிய விவசாயிகள் முன்னெத்து வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பயிர்செய்கைக்கான நீர் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு தீர்வாக சமனல குளத்தின் நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் எழுந்துள்ளதுடன், இது தொடர்பான பிரேரணை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்குவதற்கு சில தரப்பினர் நேரடியாக தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.