follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஞானசாரவின் நியமனம் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் - ரவூப் ஹக்கீம்

ஞானசாரவின் நியமனம் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் – ரவூப் ஹக்கீம்

Published on

ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்செயல்களைத் தொடர்ச்சியாகத் தூண்டி வருபவரும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டவருமான பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மிகவும் வன்மையாக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்,அவர் இதனைச் சில ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

எவருக்குமே அறவே புரியாத, எந்தவிதமான தெளிவுமற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விவகாரம் பற்றி பல்லின சமூகத்தவர் வாழும் இலங்கை நாட்டில் மக்கள் மத்தியிலும் பொது வெளியிலும் தாறுமாறான கருத்துக்கள் பரவலாக நிலவிவரும் நிலையிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா என்ற பலத்த சந்தேகம் வலுப்பெற்றுவரும் நிலையிலும், இன முறுகலை தொடர்ச்சியாகக் தோற்றுவித்து, வன்செயல்களைத் தூண்டி வருபவரும், குறிப்பாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும் பகிரங்கமாகவே நிந்தித்து வருபவரும், பொதுவாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாகத் தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருபவருமான ஞானசார தேரரை பிரஸ்தாப குழுவுக்கு தலைவராக நியமித்திருப்பது நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மேலும் மோசமான நிலைமைக்கே இட்டுச்செல்லும்.

அரசாங்கத்தின் இச் செயல்பாடானது நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகத் திட்டவட்டமாகக் கருதலாம்.

ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறு நடக்கின்றதென நம்புவதோடு, இதன் பின்னணியில் மறைகரங்களும், வெளிச்சக்திகளும் இருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் மேலெழுவதும் இயல்பானதே. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து,அதன் செல்வாக்கு சரிந்து வரும் காரணத்தினால், அரசாங்கத்தின் பலவீனத்தை மூடிமறைப்பதற்கும் மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்கும் இவ்வாறான கீழ்த்தரமான அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவது கண்கூடாகும்.

அத்துடன் பிரஸ்தாப செயலணியில் தமிழ் மக்களின் சார்பிலோ, கிறிஸ்தவர்கள் சார்பிலோ எவருமே உள்வாங்கப்படாததும் ஒரு பாரிய குறைபாடாகும்.

இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையை பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், நாட்டில் வாழும் சகல இனங்களுக்கு இடையிலும் ஒற்றுமையும் நல்லுணர்வும் நிலவ வேண்டும் என்று நேசிக்கும் பிரஜை என்ற முறையிலும் எனது கண்டனத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் வன்மையாகப் பதிவு செய்கின்றேன்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...