டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே உலகின் மிகச் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படும் மஸ்க், கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளைக் குறைக்கும் ‘டாஸ்’ துறையின் தலைமைப் பொறுப்பையும் வகித்தார்.
இந்நிலையில், “BIG BEAUTIFUL” என அழைக்கப்படும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக குரல் கொடுத்த மஸ்க், பதவியை இராஜினாமா செய்து, டிரம்பின் நடவடிக்கைகளை திறந்தவெளியாக விமர்சிக்கத் தொடங்கினார்.
அமெரிக்க அரசியலில் பாரம்பரியமாக நிலவி வரும் இரு கட்சி முறைக்கு மாற்றாக, “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாக மஸ்க் அறிவித்துள்ளதால், அரசியல் சூழ்நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்க்கின் புதிய கட்சி தொடங்கியதைக் குறித்துப் பேசிய அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்,
“இது மிகவும் அபத்தமானது. குடியரசுக் கட்சி தற்போது பெரிய வெற்றியைக் காண்கிறது. ஜனநாயகக் கட்சி தங்கள் பாதையை இழந்துவிட்டது. அமெரிக்க அரசியல் எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்தது. மூன்றாம் கட்சி என்றால் அது குழப்பத்தையே அதிகரிக்கும்,” என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தல்களில் மஸ்க்கின் புதிய கட்சி எவ்வாறு அமெரிக்க அரசியலை மாற்றப்போகிறது என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.