follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2"மக்களால் நிராகரிக்கப்பட்ட நான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன்"

“மக்களால் நிராகரிக்கப்பட்ட நான் பாராளுமன்றம் செல்ல மாட்டேன்”

Published on

மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.”

“மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை.”

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்திக்கு எங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்தப் பிரதிநிதித்துவ முறைமை வந்த பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தனித்து ஒரு கட்சி எடுப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளோடு எந்தக் கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்தது இல்லை. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வித்தியாசமான தேர்தல் முறையிலே ஆறில் ஐந்து பெரும்பான்மை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசுக்குக் கிடைத்திருந்தது.

அப்படியான ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்ற அடிப்படையிலும் தான் இந்தப் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த கையோடு மஹிந்த ராஜபக்ஷ கூட தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்திருக்கவில்லை.

அதற்குப் பின்னர் கட்சி மாறல்கள், கட்சித் தாவல்கள் ஊடாகத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

ஆனால், இந்தத் தடவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் சென்று 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது.

இது உண்மையில் வியத்தகு வெற்றி. அப்படியான வெற்றியை ஈட்டியவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதில் இன்னொரு விடயமாக கடந்த பாராளுமன்றத்திலே மூன்றே மூன்று ஆசனங்களை வைத்திருந்த தேசிய மக்கள் சக்தி இந்த பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைத் தனித்துப் பெற்றிருப்பது இன்னொரு சாதனை.”  என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...