உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் யுக்ரேன் அதிபரை கண்டித்தனர், யுக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் இருவரும் குற்றம் சாட்டினர்.
“நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை,” என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார்.
“நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை.” என்றார் டிரம்ப்.
“நான் விளையாடவில்லை,” ஜெலன்ஸ்கி பதிலளித்தார்.
“நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்” என்றார் ஜெலன்ஸ்கி.
“நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள்,” என்று டிரம்ப் பதிலளித்தார்.
“நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.” என்றார் டிரம்ப்.
“இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது ‘நன்றி’ என்று சொன்னீர்களா? இல்லை” என்று வான்ஸ் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் அங்கே சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.