இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
இந்திய உதவித் திட்டத்தின் கீழுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் இவ்வாண்டில் 4,700 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தாலும், இம்முறை எந்தவிதக் கட்சி, நிறப் பாகுபாடும் இன்றி முன்னுரிமை அடிப்படையில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மண்சரிவு எச்சரிக்கை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தோட்ட வீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு உள்நாட்டு நிதியங்களிலிருந்து 1,300 மில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.