தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஏடிஎம் மூலம் பழைய தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும். ஏடிஎம் இயந்திரத்தில் தங்க நகைகளை வைத்தால் அதன் எடைக்கு ஏற்ப பணம் என்பது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஏடிஎம் குறித்த விபரம் வருமாறு:
நாடுகளுக்கு இடையேயான மோதல் மற்றும் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் தங்கம் விலை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை என்பது புதிய உச்சம் தொடுகிறது. நம் நாட்டில் தங்கம் விலை என்பது வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 72,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ 70 உயர்ந்து, ரூ 9,015-க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிராம் 9 ஆயிரத்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ 72 ஆயிரத்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஷாக்காகி உள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நம்மில் பலரும் பண கஷ்டத்தின்போது கையில் இருக்கும் தங்கத்தை வங்கி, நிதி நிறுவனங்களில் அடகு வைத்து அதற்கு ஈடாக பணத்தை பெறுவோம். இதற்காக நாம் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை எளிதாக்க சீனாவில் தங்க ஏடிஎம் என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது சீனாவின் ‛கிங்ஹுட் குழு’ என்ற நிறுவனம் சார்பில் இந்த தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள தனியார் மாலில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கத்தை எளிதில் விற்பனை செய்யலாம். அதாவது பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் தங்கநகையை விற்பனை செய்ய நினைத்தால் இந்த ஏடிஎம்மை பயன்படுத்தலாம்.
அதன்படி தங்கநகையை பொதுமக்கள் இந்த ஏடிஎம்மில் வைக்க வேண்டும். அதன்பிறகு அந்த நகையை ஏடிஎம் இயந்திரம் உள்ளிழுத்து கொள்ளும். அதன்பிறகு நகையின் எடை குறித்த அறிவிப்பு ஏடிஎம் இயந்திரத்தில் காண்பிக்கப்படும். அதன்பிறகு நாம் ஓகே செய்தால் அந்த தங்கநகை உருக்கப்பட்டு விடும். மேலும் அதற்கு நிகரான பணம் என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் அடுத்த 30 நிமிடத்தில் செலுத்தப்படும்.
இந்த ஏடிஎம்மில் நகையை விற்பனை செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது குறைந்தபட்சம் 3 கிராமுக்கு மேலாக தங்கநகைகளை ஏடிஎம்மில் வைக்க வேண்டும். அதோடு அந்த தங்கநகைகளின் தூய்மை என்பது 50 சதவீதத்துக்கு குறைவாக இருக்க கூடாது.
இந்த ஏடிஎம் மூலம் மக்களின் நேரம் சேமிக்கப்படுகிறது. அதோடு காகித பயன்பாடு குறைவதோடு, உடனடியாக பொதுமக்களால் பணத்தை பெற முடிகிறது. சமீபத்தில் ஒருவர் 40 கிராம் எடை கொண்ட நெக்லஸை இந்த தங்க ஏடிஎம்மில் வைத்து ரூ.4.2 லட்சம் ரூபாயை அரை மணிநேரத்தில் பெற்றுள்ளார்.
தற்போது சீனாவில் உள்ள பலரும் தங்க நகைகளை விற்பனை செய்ய இந்த ஏடிஎம்மை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கும் கூட்டம் நிரம்பி வருகிறது. இதுதொடர்பாக சைனாடைம்ஸ்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛தங்க ஏடிஎம்மை பயன்படுத்துவதற்கான புக்கிங் என்பது அதிகரித்துள்ளது. வரும் மே மாதம் வரையிலான புக்கிங் முடிவடைந்துவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.