சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.
குறித்த அறிக்கையை விரைவாக கையளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவரொருர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, குறித்த திடீர் மரணம் பகிடிவதை காரணமாக இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவரொருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பகிடிவதை குற்றவியல் குற்றம் என்பதால் அவ்வாறான விடயம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படுமாயின் அதனுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.