வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
மே மாதம் 03 ஆம் திகதி நடைபெறும் இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விபரங்களை 2025.05.04 ஆம் திகதியன்று ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025.05.04 ஆம் திகதியன்று வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிருவாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி பிரச்சாரக் கூட்டங்களின் விவரங்களை வெளியிடும்போது அனைத்து கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் மற்றும் செய்தித்தாள்களில் முறையே ஒளிபரப்பு நேரம் மற்றும் இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
04.05.2025 அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை வெளியிடும் போது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியை மட்டுமே வெளியிட வேண்டும்.
05.05.2025 மற்றும் 06.05.2025 செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை வழங்குவதிலோ அல்லது வேறு எந்த வகையிலும் கட்சிகள் / குழுக்கள் / வேட்பாளர்களை ஊக்குவிப்பதன் மூலமோ அல்லது அவர்களை புண்படுத்தும் எந்தவொரு தோற்றத்தையும் காட்டுவதன் மூலமோ எந்தவொரு அரசியல் பிரச்சார செய்திகளும் செய்யப்படக்கூடாது.
உரிமம் பெற்ற தேர்தல் அலுவலகங்கள் அதாவது ஒவ்வொரு பிரிவுக்கும் தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் தாபிக்கப்பட்ட ஊடக அலுவலகங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் 2025.03.03 முதல் 2025.05.07 வரை இயக்கப்படும்.