மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள் ஏராளம்.
இன்று பெரியவர்களாய் இருக்கும் பலரும் மண்ணோடு உருண்டு புரண்டு விளையாடிய மகிழ்ச்சியான அனுபவத்தை கொண்டு இருப்போம். எத்தனை விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் இயற்கையின் இலவசமான விளையாட்டுப் பொருள் என்றால் அது மண்தான்.
அதில் விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள். குழந்தைகள் மண், மணலில் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!
* கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
* மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல், குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.
* குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.
* மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.
* ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.
* பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.
எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள். வீடுகளில் மணல் தரைகள் இல்லாத இந்த காலச்சூழலில் குழந்தைகளை பூங்காக்களுக்கும், கடற்கரைக்கும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.
இயற்கையின் கொடையான மண்ணை நேசியுங்கள்.