தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு எதிராக நிறைவேற்று அதிகாரம் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அதிகாரத் துஷ்பிரயோகமாக அமையும் என்ற வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (15) ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் தீர்மானிக்கும் உரிமையை ஜனாதிபதி மீறுவதாகக் குற்றம் சுமத்தினார்.
அத்துடன், அனைவருக்கும் சட்டம் சமம் என்று தெரிவித்த ஜனாதிபதி, தற்போது சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார்.
ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.