ஐக்கிய நாடுகள் மற்றும் பிற உதவி அமைப்புகள் காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளன.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேலின் முற்றுகை, உதவி மற்றும் எரிபொருள் விநியோகத்தைத் தடுத்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எல்லை முடக்கமாகும்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
உதவி நிறுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 4 லட்சம் குழந்தைகள் உட்பட 10 லட்சம் மக்களின் தினசரி தண்ணீர் விநியோகம் சராசரியாக 16 லிட்டரில் இருந்து 6 லிட்டராகக் குறைந்துள்ளதாகவும், எரிபொருள் தீர்ந்துவிட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும், யூனிசெஃப் எச்சரிக்கிறது.
காஸா மக்களுக்கும் சுத்திரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக முழு திறனில் செயல்பட முடியாமல் உள்ளன. காஸாவில் உள்ள தண்ணீர் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் 85 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிலிருந்து காஸாவுக்கு தண்ணீர் வழங்கும் மூன்று முக்கிய தண்ணீர் குழாய்களில் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்” என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்தார்.