பல ஆசிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
சிங்கப்பூரில் ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கைத் தவிர, கடந்த சில மாதங்களில் சீனாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிப்பதற்கு, கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு JN.1 தான் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின் படி இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும், அவற்றில் 53 பேர் மும்பையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.