சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று(21) அலரி மாளிகையில் நடைபெற்ற சங்கைக்குரிய குருபிட தம்மானந்த தேரரின் எண்ணக்கருவின் அடிப்படையில், பாதுக்க புத்த ஷ்ராவக நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 60 பல்கலைக்கழக பிக்குகளுக்கு திரிபிடகத்தின் இலத்திரனியல் பிரதிகளுடன் கூடிய டேப்லெட் கணினிகள் மற்றும் திரிபிடக நூல்களை விகாரைகளுக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, திரிபீடகத்தின் இலத்திரனியல் பிரதியுடன் கூடிய டேப்லெட் கணனியை மகா சங்கத்தினருக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
தர்மத்தின் இருப்பிற்காக இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்வது மிகவும் காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும். இன்றைய துரித தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆன்மீக பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு சவாலாக விளங்குகின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்பத்தையும் புதுமையையும் எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் பௌத்த தத்துவத்தை கற்பிக்கவும், பாதுகாக்கவும், பரப்பவும் பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறது.
திரிபிடகம் என்பது வெறுமனே ஒரு சமய நூல் தொகுப்பு மட்டுமல்ல. இது பௌத்த நாகரிகத்தின் தார்மீக, தத்துவ மற்றும் ஆன்மீக அடித்தளமாகும். இளம் பிக்குகள் இந்த புனித நூல்களை விரைவாக அணுக உதவுவதன் மூலம், இளம் மகாசங்கத்தினர்களுக்கு இடையிலான பிணைப்பு பலப்படுத்தப்படுகிறது. மேலும், இன்றைய உலகில், சமயத்தை கற்று அதனை நடைமுறைப்படுத்தவும், புத்தரின் தர்மத்தை வாழ்க்கையில் கொண்டு வரவும் ஒரு வாய்ப்பாக உள்ளது.
இதுபோன்ற திட்டங்களை ஆதரிப்பதற்கும் சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. புத்த ஷ்ராவக உபசரிப்பு நிலையம் போன்ற நிறுவனங்களை போசிப்பது நமது சமூகத்தின் தார்மீக மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு அவசியமானது என்று அரசாங்கம் கருதுகிறது.
புத்த ஷ்ராவக நிலையத்தில் நோய்வாய்ப்பட்ட பிக்குகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு, ஓய்வு, இரக்கம், மரியாதை மற்றும் சேவை ஆகியவை எமது நாட்டின் உயர்ந்த முன்மாதிரிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்த உன்னதமான நோக்கத்திற்கு பங்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொருள் ரீதியாகவோ அல்லது ஆன்மீக ஊக்கத்தின் மூலமாகவோ காட்டப்படும் ஆதரவு, தாராள மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.