நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நாட்டிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதேபோன்று, கடந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் ஏற்பட்ட மாற்றத்தின் போது நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வெற்றிக்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.
நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஓய்வுபெறுவதை முன்னிட்டு இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனிதர்களின் உண்மையான மதிப்புகளுக்குப் பதிலாக ஏனைய விடயங்கள் மதிப்புமிக்கவைகளாக மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில், நாட்டையும் சமூகத்தையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தனிமனித மதிப்புகள் கொண்ட புதிய மதிப்பு முறையின் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகப்படியான நுகர்வு மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட அரச சேவைக்குப் பதிலாக, மனிதாபிமானத்துடனும், மற்றவர்களிடம் உணர்திறன் உடையவராகவும் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் அரச சேவையே நாட்டிற்கு அவசியம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், அரச சேவை, பிரஜைகளுக்கு மேலால் உள்ள மற்றும் மக்களுடன் தொடர்பில்லாத ஒரு பொறிமுறையாக இருக்கக் கூடாது என்பதுடன், தீர்மானங்களை எடுக்கும்போது, அத்தீர்மானங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எப்போதும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதிக அனுபவமும் ஆழமான புரிதலும் கொண்ட சிரேஷ்ட அரச அதிகாரியான மஹிந்த சிறிவர்தனவின் தொழில் வாழ்க்கையிலிருந்து இளம் அரச அதிகாரிகள் பல முன்மாதிரிகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.