16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு வேலை உள்ளிட்ட ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தடை செய்வதற்கு தற்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த சட்டவிதிகள் இன்றிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு 39 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (திருத்தம்) சட்டத்திற்கு ஏற்ப 18 வயதுக்குக் குறைந்த சகல பிள்ளைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவதுடன், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கல்வி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயக் கல்வியைப் பெற வேண்டிய வயதாகக் கருதப்படும்
16 வயதை விடக் குறைந்த பிள்ளைகள் பாடசாலை கல்விக்கு அனுப்பப்படாதிருந்தால் அதற்கு எதிராக சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதுடன் இன்று முதல் இந்த சட்டங்கள் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அண்மையில் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.
அவ்வாறே வீதியில் யாசகம் எடுத்தல், வியாபாரத்தில் ஈடுபடுதல், அபாயகரமான தொழிலில் ஈடுபடுதல் அல்லது ஏதேனும் வேறு முறைகளில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற மற்றும் சிறுவர் உதவி சேவை, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் 109 அவசர அழைப்பு சேவைக்கு நாட்டின் எந்த ஒரு பொலிஸ் நிலையத்தின் ஊடாக அல்லது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதனால் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.