ஒரு நபரிடம் வாக்குமூலம் பெற அழைக்கப்படும் போது, அவருக்கு எதிரான முறைப்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்கான புதிய சுற்றறிக்கை ஒன்றை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (03) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல், எரிசக்தி நிபுணர் விதுர ருலபனாவ் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர், சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்தை எதிர்த்து, தன்னை வாக்குமூலம் பெற அழைத்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அதற்கான காரணம் மற்றும் முறைப்பாட்டின் விவரங்களை கூற மறுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறியது எனவும், அந்த அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிராக தாம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இவ்வகை சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில், தொடர்புடைய சுற்றறிக்கையை தயாரித்து நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் திருப்தி தெரிவித்த மனுதாரரின் சட்டத்தரணி, விசாரணையை நிறைவு செய்யலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை ஏற்று, உயர் நீதிமன்றம் மனுவின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்ததாக அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பரிசோதகர் மற்றும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.